வெள்ளி, 4 செப்டம்பர், 2020

1-16 விநாயகர்

 ஒன்றான மெய்ப்பொருளே ஓங்காரத் தத்துவனே!

நன்றாயுன் காதிரண்டில் நானளிக்கும் - குன்றாத

முத்தமிழைக் கேட்டுக்கொள்! மோதகமும் செஞ்சுதாரேன்!

சத்தமின்றி நாலுகாசு தா! 


அஞ்சு கை ஆண்டவா

ஆனைமுக மானவா! 

ஆறுமுக வேலனுக்கு

மூத்தவன் நீ அல்லவா (அஞ்சுகை)

ஏழுலகை ஆள்பவா!

ஏழையென்னை ஆளவா!

எட்டுதிக்கும் உன்புகழ் - கொடி

கட்டிப் பறக்கு தல்லவா! (அஞ்சு கை) 


ஒம்போது கோள்களுமே

ஒவ்வொண்ணும் ஒருதினுசா

பத்துவிதப் பிரச்சனைகள்

பண்ணுதைய்யா - எனக்கு (பத்துவித.,.தய்யா)

மத்த பத்தோட பதினொண்ணா

இத்தையும் நீ தீர்த்துவிடு

பன்னிருகை வேலவனைப்

பந்தயத்தில் கெலிச்சவா! (அஞ்சு கை)


பதிமூணு தலமுறைக்கும்

சேரும் சொத்து கேக்கல!

பதினாலு உலகத்தையும்

ஆளுமாசை எனக்கில்ல!

(பதிமூணு)

பதினஞ்சு உண்டவனின் பாலகனே - கழுத்தில் (பதி நஞ்சு... பாலகனே) எனக்குப்

பதினாறு செல்வத்துல

பாதியாச்சும் தந்திடப்பா!  (அஞ்சுகை)


#sundarappaarvai

#சுந்தரப்பார்வை

வியாழன், 3 செப்டம்பர், 2020

சக்தி விளக்கம்

 கேட்டால் என்ன மாட்டேனென்றாச் சொல்லப் போகின்றாள்? இவன்

பாட்டாய்ப் பாடும் பொருளாய் எல்லாம்

அவளே நிற்கின்றாள்! 

காட்டாளென்றே இருந்தேனென்னுள்

கவிதை நெய்கின்றாள்! அக்

கவிதைக்குள்தன் சரிகைச் சிரிப்பைக்

காட்டிப் புரக்கின்றாள்!


எங்குமெதிலும் சக்தி! இங்கெல்லாம் தாயின் வியக்தி! 

அங்கிங்கோடும் புத்தி! அது அவளைநெருங்கிட முக்தி!


பொருளுக்கலையும் போதில் கைவாய் பொத்தி நகைக்கின்றாள்! அவள்

அருளுக்கலையும் போதென்கண்ணைக்

கட்டி ஒளிந்திடுவாள்!

தருணத்துக்குள் ஏதோசெய்தே தாங்கிப் பிடித்திடுவாள்! அத்

தருணம் வருமுன் தருபவையாலென்

தலையை உடைத்திடுவாள்!


அன்புமின்பும் சக்தி!

இவ்வகிலமவளின் வியத்தி!

துன்புந்துயரும் சக்தி! அத்

தொடர்பில்விளைவது முக்தி!


ஒக்கலிலே உன்மகவைத் தூக்கி

உட்கார்த்தென்றேன் நான்! உன்

பக்கத்திருப்பேன்

பாரெனச் சொல்லிப் பறந்தனளன்னையுமே! நான்

விக்கி விதிர்த்தே விழிமழைபெய்தே

லெம்பி விழுந்தபினம் மன

வெறுமைக்குள்ளோர்

அரி மீதமர்ந்தே

தந்தாள் தரிசனமும்!


பொங்கிப் புலர்வது சக்தி! புல்

பூ மரமெல்லாம் சக்தி!

தங்காதோடிடும் புத்தி! அவள்

தாளடைந்திட்டால் முக்தி!


#sundarappaarvai

#சுந்தரப்பார்வை

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அவன் செய்தவை

 அவன்

அக்கினிக் குஞ்சைக் கவிப்பொந்தில் வைத்தே

அன்னியர் காட்டைக் கரிசெய்தவன்! - உள

திக்குகள் எட்டும்

சாதிகள் சிதறத்

தீம்தரிகிட தீம்தரிகிட

நடஞ்செய்தவன் -சிவ

சக்தியைக் கண்ணனை

வேலனை அண்ணனைச்

சாகா திருந்திடத் 

துதிசெய்தவன் - தன்

பக்தியில் அல்லா

பரம பிதாக்கும்

பங்கொண் றளித்ததில்

நெறி செய்தவன்!


தனி 

ஒருவனுக் குணவிங்

கில்லை என்றாலும்

உலகை அழித்திடும்

விதி செய்தவன் -குலத்

துயர்ச்சியும் தாழ்ச்சியும்

உளறிடும் பவத்தைக்

குழந்தையும் உணர்ந்திடும்

படிசெய்தவன் -வெறும்

பொருளெனப் பார்த்தப்

பெண்மையைப் போற்றிப்

புதுமை மாதரின்

கதி செய்தவன் - தன்

புலமைத் திறத்தால்

வைய மெல்லாமும்

புரந்திட வேண்டிக்

கவி செய்தவன்


விழி

கண்ணீர் வார்த்துச் சுதந்திர நெல்லை

காத்து வளர்த்துப்

பயிர் செய்தவன் - அக்

கனவினை நனவாய்க் கண்களிற் கண்டு

பள்ளொன்றும் பாடி

ஜதி செய்தவன்! இம்

மண்ணதில் தெரியும்

விண்ணினைக் கையில்

வசப்படக் கேட்டே

வழி செய்தவன்! சிறு

மாங்குயிற் பாட்டில் மறைகளும் வியக்கும்

மகத்துவ மெல்லாம்

உரை செய்தவன்!


சின்னப்

பூனைகள் வண்ணப் போக்கினை வைத்தே

பொதுமையைப் பேசும்

நடைசெய்தவன்! - வெறும்

புல்லினை நெல்லாய்ப் புரிந்திடு விந்தை

புரந்திடத் தாயிடம்

புகல் செய்தவன்! மத

ஆனையின் கால்கீழ்

மாட்டிய பின்னும்

மற்றதை இகழா

மனஞ்செய்தவன்! ஓர்

அணங்கவள் கதையைப்

பாரதத் திருந்தே

அழகாய் அழகாய்த்

தமிழ்செய்தவன்! 


நம்

கண்ணனைப் பெண்ணாய்க்

காதலி ஆக்கிக்

கண்ணம்மாவென்

றெழில் செய்தவன்! ஒளி,

காற்றைத் தீயை வசனத்தில் ஏற்றிக்

கவிதையிற் புதிய

திசை செய்தவன்! நாம்

எண்ணிய முடிதல் வேண்டுமென் றோதி

இளைஞரின் மனதைத் திடஞ் செய்தவன்! என்

ஏகாந் தத்தில் 

பாகாய் நிறைந்தே

எழுதுங் கவியாய்

எனைச் செய்தவன்!

ருண விமோசன துதி

 ருண விமோசன ஸ்துதி 


கடனாங் கடலிற் கரையின்றிக் காயும்

முடவனைக் காப்பாய்முக் கண்ணா  - உடனடியாய்ச்

செல்வத்தை நீசேர் செழும்பதத் தாமரைக்கே

வில்வத்தைச் சேர்ப்பேன் விரைந்து!


காக்குங் கடன்கொள் கருமாலே என்கடன்கள்

போக்கும் வழிநீ புகல்வாயே! தூக்கம்

விலக்கி விளம்பு! விரிபூங் கழலில்

துளசி நிறைப்பேன் தொழுது! 


விசாலச் செவியில் விழுமென் முறைக்கே

கஜானனா மோனம்காட் டாதே! உசாத்துணையாய்

என்கடனை நீயோட்(டு) எருக்கோ(டு) அருகாலே

உன்கடனைத் தீர்ப்பேன் உடன்! 


வேலெறிந்து சூரனவன் வேலை முடித்திட்ட

வேலவனே நீயெனக்கோர் வேலைசெய் - காலனெனக்

கட்டிக் கழுத்தை இறுக்கும் கடன்நீக்குக்

கொட்டிக் கொடுப்பேன் குரா! 


அம்மா! மகாலக்ஷ்மி! ஆதரிக்க நீயல்லால்

இம்மா நிலத்தில் எவருண்டாம்? நம்பினேன்! 

தீர்ப்பாய் இவன்ருணத்தைத் தேவியுன் பாதத்தில்

சேர்ப்பேன்நான் செந்தா மரை!


செம்பருத்தி குண்டுமல்லி சேர்சேராய்ச் சாற்றியுனை

நம்பிப் பதம்பிடிப்பேன் நாயகியே! அம்பிகையே!

வெக்காளி! துர்கா! விரட்டுங் கடன்களென்றன்

பக்கத்தில் அண்டாமல் பார்!


வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் தாயுனக்கு

வெள்ளைக் கமலமதே வர்ஷிப்பேன்! தொல்லைதரும்

இந்தக் கடன்களைநீ இல்லாமல் ஆக்கிவிடு!

சொந்தமகன் அன்றோநான் சொல்! 


அண்ணன் அருச்சுனனுக்(கு) அன்று ரதமோட்டு

கண்ணா எனக்குக் கடனோட்டு - வண்ணத்தால்

நீலத்துத் தாமரை, நந்தியா வட்டத்தால்

காலத்தில் தீர்ப்பேன் கணக்கு!


சாமலிப் பூக்களள்ளிச் சாற்றுவேன் நானுனக்கே!

ராமனே! ஜானகியின் நாயகனே! தாமதமாய்

மோட்சம் பிறிதொருநாள் மோகிப்பேன்! இன்றுருண

மோட்சத்தைத் தாநீ முனைந்து!


மந்த நடைபயிலும் மாக்கோள் சனைச்சரனே!

மந்த நடைவிடுத்து வேகங்கொள்! தொந்தமெனப்

பாலனிவன் சேர்த்தப் பலகடனை நீநீக்கு!

நீலக் குவளை நினக்கு! 


#sundarappaarvai

#சுந்தரப்பார்வை

கண்ணன் என் பாகன்

 ஒரு குதிரையின் கடைசிக் கவிதை 


#புதியகண்ணன்பாட்டு


கண்ணன் என் சாரதி


பொன்னிறத் தோல்கொண் டன்றோர்

புரவியாய் புவிக்கு வந்தேன்!

என்பெயர் அந்த வாலிக்(கு)

இளையவன் பெயரே ஆகும்!

முன்னமோர் போரில் நண்பர்

மூவரோ டிணைந்தே நானும்

மின்னலின் வேகத் தேரை

மிதந்திடச் செலுத்தி னேனே!


தேரிருந் தோர்கை வேண்டும்

திசைக்கெமைத் திருப்பும்! அந்தக்

காரிருள் கரத்தை எங்கள்

கடைக்கணால் பார்த்தால் போதும்!

நேரிடும் உணர்ச்சி ஊற்றால்

நிகரிலா வேகங் கொள்வோம்! 

பாரதப் போரைக் கண்ணால்

பார்த்தசஞ் சயனே சாட்சி! 


எத்தனை அம்பம் மம்மா 

எத்தனை குருதி? பட்ட

அத்தனை வலியும் அன்றே

அல்லினில் எமைநீ ராட்டிச்

சுத்தமாய்ப் பாகன் தேய்க்கும்

சுந்தரச் சுகத்தில் சாகும்!

மொத்தமாய் மீண்டே காலை

மோதுவோம் பணிக்குச் செல்ல! 


ஆனையைத் தாண்டி வீழ்ந்த

ஆயிரம் பரிகள் தாண்டிச்

சேனையைத் தாண்டி மாண்ட

சவங்களைத் தாண்டி சிந்துக்

கோனையன் றடைய வேண்டிக்

கொண்டயெம் வோட்டம் எல்லாம்

வானெழும் கடவுள் ஓட்டும்

வகைகளும் கண்ட தில்லை! 


புல்லரிந் தூட்டி நாளும்

புதுப்புது வகையிற் செய்தக்

கொள்ளெடுத் தூட்டி வாழும்

கொட்டிலைச் சுத்தம் செய்துப்

பிள்ளையைப் போலக் கொஞ்சும்

பெருமகன் செயலை எல்லாம்

சொல்லினால் உரைக்கப் போமோ? 

சுகனவன் தாதை யானோ? 


பகவனுக் கென்றே பக்தர்

பலஅபி ஷேகம் செய்வார்!

மிகப்பல காரம் வைத்தே

வேண்டிநை வேத்யம் என்பார்!

பகவனே எமைச்சீ ராட்டிப்

பண்டமும் ஊட்டும் அந்த

மிகப்பெரும் பேறெம் போலே

மேவினார் எவரும் உண்டோ?


முடிந்தது யுத்தம்! சங்கம்

முழங்கின ஓம்ஓம் என்றே!

விடிந்தது பாரும்! கண்ணன்

விலகியே நிற்கச் சொன்ன

படியுடன் பார்த்தன் செல்லப்

பரமன்பின் நீங்க நின்றக்

கொடியிருந் தனுமன் 

தாவக்

கொழுந்துவிட் டெரிந்தோம் தேரில்! 


தேரிருந் திருந்த அந்தத்

திக்கிலே நொடியில் காயும்

நீறிருந் ததுநீ றாகி

நின்றிருந் தோமே நாங்கள்!

வாரிருந் தெம்மை நாளும்

வழிநடத் திடுவான் தாளில்

சீருடன் இணைந்தோம் அங்கே

சென்றபின் வருவார் உண்டோ?


கருத்தவன் மேக புஷ்பன்

கண்கவர் பச்சை சைப்யன்

விருப்புடன் பலரும் நோக்கும்

வெண்பல ஹாக னென்னும்

பரிகளின் கூட்டில் யான்வாழ்

பதினெட்டு நாட்கள் தந்தால்

மறுப்பின்றி மீண்டும் மீண்டும்

மண்பிறப் பெய்வேன் அன்றோ? 


இப்படிக்கு

சுக்ரீவன் எனும் குதிரை


#sundarappaarvai

#சுந்தரப்பார்வை


கீதோபதேசக் குதிரைகளின் பெயர் மற்றும் நிறம்....


சைப்ய = கிளிப் பச்சை

சுக்ரீவ = தங்க நிறம்

மேக புஷ்ப= மேக வர்ணம்

பலஹாக = தூய வெண்மை

புதன், 19 ஆகஸ்ட், 2020

அரிநரன் துதி

 அரிநரன் துதி! 


மாணியவன் வார்த்தைக்கு

மதிப்பளித்த காரணத்தால்

மறைந்துறைய பூமியெங்கும்

மாவடிவம் கொண்டவனே

நாணிக்கண் புதைக்கும்

நாயகியும் அச்சத்தால்

நாடாமல் எட்டநின்ற

நாரணனே பாலனெனைப்

பேணிப் புரத்தலுன்றன்

பெருங்கடமை ஓராயோ

பிதற்றல் எதற்கென்றே

பிடரியினால் தடுத்தாயோ?

தூணுக்குப் பிறந்ததனால்

துடிப்பற்றுப் போயினையோ?

தொழுங்குரலைக் கேளாமல்

தோதுதவம் என்பாயோ?


யாகத் தணல்விழுங்கும்

ஆகுதிகள் அத்தனையும்

யாரடியைச் சேர்வதனால்

வேண்டுவதைத் தந்திடுமோ

ஏகத் திறையவனை

ஈருருவம் ஓர்வடிவாய்

இயைந்த பரம்பொருளை

எண்ணத்தில் ஏற்றியபின்

வேகத் தடைகளெனை வீழ்த்திடுமோ?பத்தியினால்

விண்ணைப் பிடித்திழுத்து

மண்சேர்க்க ஏலாதோ? 

யோகத் தமரந்திறைநீ

சாதிப்ப தென்னேயோ?

உவந்திவனை நோக்கிடவே

உன்விழிக்கு மாற்றுளதோ?


தேறித் திளைத்துன்னில்

தித்திக்கும் பானகம்நீ

தேடா துனக்கெனவே தினந்தோறும் செய்வித்துச்

சீறு மிதழ்களிக்கச் சேவிப்பேன்! செந்திருத்தாய்

சேரும் வரைகழல்கள் சிறப்பாய்ப் பிடித்திடுவேன்!

கீறும் நகவிடுக்கின் கீழ்பொன்னன் குருதியெலாம்

கிட்டத் திருந்தபடித் துடைத்தெடுப்பேன்! நரசிங்கா

வேறென்ன பிள்ளை விழைந்திடுவேன்? நின்னருகில்

வீற்றிருக்கும் பாக்கியமாம் வீடதனைத் தாராயோ?


#சுந்தரப்பார்வை

#Sundarappaarvai

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

கண்ணன் என் தோழன்

#புதியகண்ணன்பாட்டு

கண்ணன் என் தோழன்

கண்ணனை நாடிச் செல்கை 

சோவெனக் கொட்டிடும் பேய்மழை - பசிச்
சோர்வில் இருளும் விழிகளால் - தனித்
தீவென ரெண்டு மரத்தினில் அன்று
தேடி அடைந்தனம் தஞ்சமே! பழி
நாவென தன்று நடத்திய - துளி 
நாணமிலா தந்தச் செய்கையாம் - பெரு
மாவலில் நண்பனின் பங்கெனக் கொண்ட
அவலும் புசித்திளைப் பாறினேன்! (1)

ஏனெனக் கேட்கவு மில்லையால்! அவன்
ஏதும் மொழிந்திட வில்லையால்! எனை
நானென எண்ணும் தருக்கினால் அதை
நண்பன் மறந்தன னென்றவா றவன்
தேனினை ஒத்த குழலிலும் பல
தீம்பிலும் வேடிக்கைப் பேச்சிலும் விரி
வானென நின்றிடும் அன்பிலும் தினம்
வாடிக்கை யாகக் கழியவே (2)

காலத்தில் கல்வி முடிந்திடக் கொடுங்
கால முடல்கள் பிரித்திட அவன்
சீலத்திற் கேற்ற வகையிலே புகழ்
சேரத்துச் சகத்தினை ஆண்டிட வருங்
கோல வறுமையிற் சிக்கியான் எனைக்
கொல்ல அதுநினை வேளையில் , சகி
பாலிக்கவே உள்ளத் தோழனைச் சென்று
பார்த்து வரவெனைத் தூண்டினள்! (3)

ஆண்டுகள் பற்பல வானபின் அந்த
அன்பின் மறுவுரு தன்னைநான் இன்று
மீண்டும் அடைந்திடும் வேளையில் உள்ள
மிடியின் கடுமையை என்சொல? எந்த
வேண்டு தலுங்கொண்ட தில்லைதான் - அருள்
வேந்த னெனினும்நான் வெற்றுக்கை உடன்
ஈண்டவ னைச்சென்று நாடிடின் என்ன
ஏற்ற மதிலென வாடினேன்! (4)

வீட்டை உருட்டி விளாவிட அங்கு
விஞ்சிய கொஞ்சம் அவலினைத் துணி
மூட்டை சிறிதெனக் கட்டியே விதி
முற்றும் அறிந்தவன் ஆண்டிடும் நல்ல
நாட்டினை நாடி நடக்கையில் கொண்ட
நாணினை எங்கணம் வார்த்தையில் இங்கு
மாட்டுவன் என்பது மோர்ந்திலேன்! அவன்
மாயைத் திறம்மிக வல்லதே! (5)

கண்ணனைக் கண்டு வருகை


இன்னுங் கனவிது காண்பனோ! இலை
யாவும் நனவெனத் தேர்வனோ! புவி
மன்னவ னென்னை எதிர்கொண்டே கட்டி
மார்புற வென்னைத் தழுவியே பல
கன்னற் பழங்கதை பேசியே என்றன்
கால்கழு வியுபசா ரங்கள் - என
என்னென்ன வோவங்குச் செய்தனன்! அவை
யாவும் நினைவினில் இல்லையால்! (6)

எத்தனை எத்தனை இன்சுவை தனை
இத்தரை இத்தரை கண்டதோ! அவை
அத்தனை அத்தனை தன்னையும் அவன்
அன்றெனக் கேவிருந் தாக்கினன்! பினர்
நித்திரை ஏகுமுன் மஞ்சத்தில் பல
நீளக் கதையுரை யாடுங்கால் ஒரு
வித்தகத் தாலவன் சட்டென என்றன்
வீணவல் மூட்டையைப் பற்றினன்! (7)

ஒற்றைப் பிடியவன் உண்டதும் அதை
ஓஹொ ஹோவென் றுவந்ததும் பின்பு
மற்றைப் பிடியொன் றெடுத்ததும் அவன்
மங்கை விழுந்து தடுத்ததும் என்றன்
சிற்றறி வுக்குளெட் டாததாம் தனி
செய்கை யதன்விவ காரத்தை தவ
முற்றவர் ஓதி வியப்பர்காண்! எது
மோர்ந்தில னேதிங் குரைப்பதே! (8)


தோழனைக் கண்ட மகிழ்வினில் அவன்
தோற்றப் பொலிவில் மயங்கியே - எந்த
ஏழைமை நீங்க விரும்பியே இவண்
ஏகின னென்பதும் விட்டனன் ! அவன்
ஆழச் செலுத்திய அன்பினில் அதன்
ஆட்டத் திலோட்டத் திலின்பினில் செல்வக்
கீழைக் கணக்குகள் நிற்குமோ! எந்தக்
கேள்வியு மின்றித் திரும்பினன்! (9)

வீடு நெருங்கிய வேளையில் அது
வேறொரு மாளிகை யாகவே! பெரும்
மாடு வழங்கியென் தோழனும் எமை
மாற்றி யருளியனன் கண்டிரோ ! எந்த
ஈடு மிலாதிந்த ஏழையை அவன்
ஏற்றுருள் செய்திட்டப் பான்மையால் சிறு
தேடலி லாமலென் நண்பனாய் திருத்
தேவை அடைந்துத் திளைக்கிறேன்! (10)